மோனா - அழகிற்கு அழகு ...





அனிமேஷன் தொழில்நுட்பத்தை பிரசவித்ததிலிருந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வால்ட் டிஸ்னி (Walt Disney) நிறுவனத்தார் செதுக்கிக் கொண்டே வருகிறார்கள். மோனா அதில் உச்சக்கட்ட படைப்பு. லிலோ, மூஸன், அலைஸ், மெகாரா, வெண்டி,  போன்ற வால்ட் டிஸ்னியின் முந்தைய பெண் அனிமேஷன் கதாபாத்திரங்களை கொஞ்சம் ஓரங்கட்டுகிறாள் இந்த மோனா.

"Sir Terrry Pratchett " என்ற எழுத்தாளரின் "Mort" என்ற நாவலை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிப்பது வால்ட் டிஸ்னியின் கனவாக இருந்தது ஆனால் காப்புரிமை விஷயத்தில் தடுமாற புதிய கதையைத் அவர்கள் தேடத் தொடங்கினர். இந்தோனேஷியாவிற்கு பக்கத்தில் பசிபிக் பெருங்கடலில் பரவியிருக்கும் பாலினேஷியா (Polynesia) என சொல்லக்கூடிய தீவுக்கூட்டங்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தை இதற்காக அவர்கள் ஆராய்ந்தனர். இறுதியில் கிடைத்த தகவல்களைக் கொண்டு "Ron Clements, John Musker, Chris Williams, Don Hall, Pamela Ribon மற்றும் Aaron and Jordan Kandel" இவர்கள் இணைந்து முழுக்கதையை எழுதி முடித்திருந்தனர். கதைக்கு பொருத்தமாக வால்ட் டிஸ்னி அனிமேஷன் குழுவினர் பல நாட்கள் உழைத்து கருப்பின பெண் மற்றும் இந்திய பெண் கலந்த 16 வயது தோற்றத்தில் உயிரோட்டமாக மோனாவை உருவாக்கினர். அந்த மோனா கதை முழுவதும் தேவதையாக உலா வருகிறாள். குறிப்பாக சில நிமிடங்கள் மட்டுமே வரும் குழந்தை மோனா ரசிக்க வைக்கிறாள். "Auli'i Cravalho" என்பவர் மோனாவிற்கு குரல் கொடுத்திருக்கிறார். I am Moana ... Moana Motunui என மோனா அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அந்த வார்த்தை திரைப்படம் முடிந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

டிஸ்னி உருவாக்கிய முந்தைய பெண் கதாபாத்திரங்களுக்கு பக்கத்துணையாக ஓனான், தவளை போன்ற உயிரினம் ஒன்று கட்டாயம் இருக்கும். அதுபோல் மோனாவிற்கு இதில் ஒரு கோழி - தோழி (Hei Hei). அமைதியாக சேட்டை செய்கிறது. தவறுதலாக மோனாவுடன் கடற் பயணத்தில் சிக்கிக்கொள்ளும் போதும்,  Its alive என ஒவ்வொரு ஆபத்திலும் தப்பிக்கும் போதும், இறுதிக் காட்சியில் அனைவரும் ஒன்றுசேர தான் மட்டும் திரும்பி வழித்தெரியாமல் கடலுக்குள் இறங்கும் போதும் திரையரங்குகளில் கைத்தட்டல்களைப் பெறுகிறது.


பெற்றோரால் கடலில் வீசப்பட்ட குழந்தையாக , கடவுளின் ஆசிபெற்றவனாக, தனது சக்தி மிகுந்த ஆயுதத்தை (Magical Fish Hook) தொலைத்துவிட்டு பல வருடங்களாக தேடுபவனாக,  சிறந்த கடற்பயணியாக, மோனாவிடம் முதலில் முரண்டு பிடித்து இறுதியில் அவளுக்காக சாகத் துணிபவனாக, கழுகு, சுறா, வண்டு என உருமாறி சாகசம் செய்பவனாக அசத்துகிறான் மாயு (Maui). அதிலும் தன் உடலில் வரையப்பட்ட டாட்டு ஓவியத்தைக் கொண்டு கதைகளை சொல்லும்போது பிரம்மிக்க வைக்கிறான். கதையின் இடைச்சொருகலாக வரும் அந்த டாட்டு அனிமேஷன் காட்சிகளை "Ron Clements John Musket" என்பவர் கைகளால் வரைந்து ரசிக்க வைத்திருக்கிறார். மாயு கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக குரல் கொடுத்து புருவத்தை உயர்த்தச் செய்திருக்கிறார் WWF புகழ் "The Rock (Dwayne Johnson)".


வேடிக்கை பெண்மணியாக, ரகசியங்களை பாதுகாப்பவளாக, மோனாவை முழுவதும் நம்புவளாக அவள் சோர்ந்துபோகும் போது பக்கத்துணையாக கலங்க வைக்கிறாள் பாட்டி டாலா (Tala). மோனாவின் தாய் (Sina), தந்தை (Tui) மற்றும் தீவுக்கூட்டத்தின் சிலர் என விரல்விட்டு எண்ணக்கூடிய சொச்ச கதாபாத்திரங்களால் முழுவதும் நிறைகிறது திரைக்கதை.
கற்பனைத் தீவு, கடல் காட்சிகள், ராட்சத நெருப்பு எரிமலை கடைசியில் அது உருமாறி தோன்றும் பெண் உருவம் என மிக நேர்த்தியாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள். தூரத்தில் தெரியும் மேகம், அசையும் பூக்கள் செடிகள், பட்டாம்பூச்சி, மீன்கள் என சிறிய கவணிப்பிலும் அவர்களது துள்ளிமான உழைப்பு தெரிகிறது. பாயும் ஈட்டி, பறக்கும் பறவை, தெரிக்கும் கடல் நீர், உடைந்து விழும் படகு மற்றும் இறுதிக்காட்சியில் தோன்றும் நெருப்பு பிளம்பு என அனைத்தும் 3D தொழில்நுட்பத்தில் கண்முன் நிழலாடுகிறது.

"Mark Mancina" என்பவர் திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். கதையோட்டத்திற்கு பக்கபலமான பாடல்களை "Lin-Manuel Maranda" மற்றும் "Opetaia Foa's" இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். அதில் "How for i'll Go" என்ற பாடல் மனதை கவர்கிறது. சென்ற வருட இசைக்கான உயரிய விருது தேர்வு பட்டியலிலும் அந்தப் பாடல் இடம்பிடித்துள்ளது. "We know the Way" என்ற பாடல் பாலினேஷியன் மக்கள் பேசக்கூடிய மொழியான "Tokelauan" மொழியில் கடற்பயணம் செய்பவர்களின் (Voyagers) பாடலாக அமைந்திருப்பது தனி சிறப்பு.

* Song - How for i'll Go.


* Song - We know the Way.



"Goddeds" என்ற பெண் கடவுள் ஆட்சி செய்யும் தீவு "Te Fiti". அந்தத் தீவின் ஒட்டுமொத்த இதயமாக "Pounsmu" என்ற பச்சைநிற கல் விளங்குகிறது. மாயு (Demigod) என்பவன் அந்தக் கல்லை திருடிக் கொண்டு போக மொத்தத் தீவும் எரிமலை குழம்பினால் ஆன "Te Ka" என்ற ராட்சதனால் பீடிக்கப்படுகிறது. திருடிக் கொண்டுபோன அந்த கல்லையும் தனது சக்திவாய்ந்த ஆயுதமான "Magical Fish hook" என்ற ஆயுதத்தையும் மாயு கடலில் தொலைத்துவிட தீவைச்சுற்றியுள்ள மற்ற பகுதிகளை யாரும் நெருங்க முடியாமல் எரிமலைச் சாம்பலினால் இருள் சூழ்ந்த இடமாக மாறுகிறது. பல வருடங்களுக்குப்பின் Te Fiti தீவிற்கு தொலைவில் இருக்கும் Motunui என்ற மற்றொரு தீவில் வசிக்கும் மோனாவை, கடல் தேவதை அந்த பெண் தெய்வத்தின் இதயத்தை மீட்க தேர்ந்தெடுக்கிறது. 16 வயதை நெறுங்கியதும் மோனா தன் பாட்டி டாலாவின் மூலமாக இந்த கதைகளை தெரிந்துக் கொள்கிறாள். அவளது பாட்டி டாலாவிடம் அந்த பச்சைநிற கல் பொக்கிஷமாக இருக்கிறது. இதற்கிடையில் மோனா வசிக்கும் தீவும் Te Ka ராட்சதனால் சிறுக சிறுக தன் வளங்களை இழக்கத் தொடங்குகிறது. முன்பொரு காலத்தில் சிறந்த கடல்பயணிகளாக விளங்கிய தன் தீவுவாசிகள் தற்போது அமைதியாக இருப்பதற்கும், வரப்போகும் ஆபத்தை நோக்கி காத்திருப்பதற்கும் அந்த ராட்சதனே காரணம் என அவள் உணர்கிறாள். கடவுளின் குழந்தையான மாயு என்பவனையும், அவனது ஆயுதத்தையும் கண்டுபிடித்து, ராட்சத எரிமலை அரக்கனை வென்று, பெண் கடவுளின் இதயத்தை சேர்பதே அதற்கு தீர்வு என மோனா தன் பாட்டியின் மூலம் மேலும் தெரிந்துகொள்கிறாள். தன் தந்தையின் சொல்லை பொருட்படுத்தாது பாட்டியிடம் இருக்கும் பச்சைநிற கல்லை பெற்றுக்கொண்டு, ஆபத்தான அலைகளைக் கடந்து கடற்பயணம் புறப்படுகிறாள். மோனா மாயுவையும் அவனது ஆயுதத்தையும் கண்டுபிடித்து எரிமலை அரக்கனை வீழ்த்தி பெண்கடவுளையும் தனது தீவையும் மீட்டாளா என்பதுதான் மீதிக்கதை.


வழக்கமான சாகச கதை தெரிந்த தொழில்நுட்பம் என்றாலும் அதை சொன்ன விதத்திலும் மனம் ஒன்றிப்போன காட்சிகளிலும் ஏதோ ஒரு குழந்தைத்தனமான உணர்விலும் மோனா மனதை கொள்ளையடிக்கிறாள்.