பிரமிடுகள் - சுவார(க)சிய தகவல்.



பிரமிடுகள் என்பது எழு அதிசயங்களில் ஒன்று என பாஸ்போர்ட் சைஸ் படம் போட்ட புத்தகத்தில் பார்த்த, படித்த நமக்கு சங்கர் புண்ணியத்தில் ஐஸ்வர்யாராயும் பிரசாந்தும் ஜீன்ஸ் படத்தில் முதன்முதலாக ஆடிப்பாடி சுற்றிக்காட்டினர். அதற்குப்பின் வெளிவந்த "தி மம்மி" என்ற ஹாலிவுட் திரைப்படம் பிரமிடுகளை வெகு அருகில் சென்று நமக்கு காட்டியது. இதனைத் தவிர்த்து எகிப்தில் இருக்கும் பிரமிடுகளும் அதில் புதைந்துள்ள உண்மைகளும் பரம இரகசியமானது. பிரமிடுகளின் உள்ளே சென்று ஆராய்ச்சி செய்வது பிரம்மிக்கத்தக்க ஒன்றாக இருக்கும் என்பதை விட, ஒரு தூரமாக ஓரமாக வெளியில் நின்று அண்ணார்ந்து பார்த்தால் கூட அது பிரம்மிக்கத்தக்க அதிசயமாகத்தான் தெரியும் ஏனென்றால் பிரமிடுகளை கட்டியது மனித செயல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அதனை உண்மையாக்கும் விதத்தில் டாக்டர் ஆலா ஷாஹீன் (Ala Shaheen) என்பவர் எகிப்தில் சிறிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உட்கார்ந்துகொண்டு பேரிச்சம்பழத்தை தின்று கொட்டையை துப்பிவிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அந்த செய்தி சாதாரண குல்ஃபி விற்கும் வியாபாரி முதல் நாசா விஞ்ஞானிகள் வரை திரும்பிப் பார்க்க வைத்தது.

அவர் வெளியிட்ட செய்தியின் சுருக்கம் இதுதான்...

" எகிப்து பாலைவனத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான பிரம்மாண்டமான கைசா பிரமிடுகளின் கட்டுமான பணியில் பண்டைய எகிப்து மக்களுக்கு வேற்றுகிரகவாசிகள் உதவியிருக்கக்கூடும் என்ற கருத்து உண்மை".

- சொன்னது நம் ஊர் மா.செ, பா.சா, ஹீ.பா அளவிற்கு நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் குழப்பவாதி கிடையாது. பல தலைமுறைகளாக பிரமிடுகளின் ஆணிவேரை ஆராய்ந்து கொண்டிருக்கும் கெய்ரோ யுனிவர்சிட்டியின் தொல்பொருள் தலைவர். ஆகையால் உலகமே அவரை திரும்பிப் பார்த்தது.

வேற்று கிரகவாசிகள் என்றால் பறக்கும் தட்டில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து, எகிப்தில் இருந்தவர்களிடம் பிரமிடு கட்ட ஒப்பந்தம் பெற்று (40% கமிஷன் உட்பட), அவர்களிடம் இருக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டு வேலையை கச்சிதமாக முடித்து, நல்லநாள் நல்லநேரம் பார்த்து சாஸ்திரத்திற்காக முதலில் ஒட்டகத்தை உள்ளே விட்டு, புதுபிரமிடு புகுவிழா நடத்தி முதல்பந்தியில் உட்கார்ந்து வயிறு முட்ட (இருந்தால்) சாப்பிட்டுவிட்டு மொய் எழுதி டாட்டா காட்டி சென்றிருப்பார்களா? - என பல நாடுகளை சேர்ந்தவர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு டாக்டர் ஆலா ஷாகின் அளித்த பதில் விளக்கம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


* தி கிரேட் பிரமிடை கட்டிமுடிக்க குறைந்தது இருபதுவருடம் ஆகியிருக்கும் என நம்பப்படுகிறது. மிகப்பெரிதாகவும் துள்ளியமாகவும் கணித சூத்திரங்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட அதனை தற்போது உள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு நம்மால் நூறுவருடங்கள் ஆனாலும் கட்டமுடியாது என்பதே உண்மை.

* பிரமிடுகள் எழுப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கல்லும் ஒரு டன் முதல் இருபது டன் வரை எடை கொண்டதாகும் அதேபோல் சுமார் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட ராட்சத கல்லை கொண்டது இந்த பிரமிடு. அந்த கற்களை பெற சுத்துப்பட்டு எட்டுப்பட்டியிலும் மலைகள் கிடையாது அதாவது சுமார் 800 கி.மீ சுற்றளவிற்கு மலைகளே கிடையாது. ஒருவேலை இருந்திருந்தால் அவற்றை வெட்டியெடுக்க ராட்சத இயந்திரங்களோ, கருவிகளோ பண்டைய எகிப்தியர்கள் வைத்திருக்கவில்லை. அவர்கள் திறமைசாலிகள் என ஒப்புக்கொண்டாலும் இருபது டன் எடையுள்ள கற்களை மிக பொருத்தமான அளவுகளில் 145.75 மீட்டர் உயரம் வரை சீராக அடுக்கமுடியுமா? என்பது சந்தேகமே. பாறைகளையும் குன்றுகளையும் வைத்து ஐலேசா போட்டு கற்களை ஏற்றியிருப்பார்கள் என வைத்துக் கொண்டால் பிரமிடுகளுக்கு பக்கத்தில் ஒரு குட்டிச்சுவர்கூட இல்லை. மரங்களை பயன்படுத்தி சாளரம் அமைத்திருப்பார்கள் என்றால் பாலைவனத்தில் ஈச்சமரத்தை தவிர்த்து வலுவான மரங்கள் என்பது காணக் கிடைக்காது. ஒரு ஆர்வத்தில் வேகத்தில் எகிப்தியர்கள் பிரமிடுகளை கட்ட பூமி பூஜை போட்டு வேலையை தொடங்கினாலும் மாதத்திற்கு பத்தாயிரம் மனிதர்கள் என இருபது வருடங்கள் (20X10000) இரண்டு லட்சம்பேர் வேலை செய்தார்கள் என வைத்துக்கொண்டால் அன்றைய எகிப்தின் சுற்றுவட்டாரத்தில் அவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் தொகையும் அதார் கார்டும் நூறுநாள் வேலைவாய்ப்பும் கிடையாது ஆகவே பிரமிடுகளை கட்டியது இந்த உலகின் மனிதர்கள் அல்ல என அவர் அறிவித்தார். மேலும் சில விளக்கங்களை டாக்டர் ஆலா ஷாகின் ஆதாரப்பூர்வமாக நிறுபித்தார்.


பண்டைய எகிப்தியர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அவர்களின் சிந்தனையில் உதித்த அனைத்து விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த குறிப்புகள் அனைத்தும் புனிதஎழுத்து முறையிலும், மறைபொருள் குறியீடுகள் நிறைந்ததாகவும் யாருக்கும் விளங்காததாகவும் இருக்கும். அந்த எழுத்துக்கள் ஹீரோகிளைஃபிக்ஸ் (Hieroglyphics) என அழைக்கப்படுகிறது. அதில் ஆம்லெட் எப்படி போடுவது, ஆப்பாயிலுக்கு முட்டை எப்படி உடைப்பது, விவசாயம் பார்ப்பது எப்படி, பிரசவம் பார்ப்பது எப்படி என சகலத்தையும் அவர்கள் குறித்து வைத்திருக்கின்றனர். ஆனால் இந்த பிரமிடுகளை கட்டியது யார்? எப்படி கட்டப்பட்டது? என்ற தகவல்கள் எதுவும் கிடையாது. ஒரு மேஸ்த்திரி, கொத்தனார் பெயரை கூட அவர்கள் அதில் குறிப்பிடவில்லை. இருந்தும் எகிப்தின் தொல்பொருள் ஆய்வில் சில தடயங்கள் கிடைத்தது. அதில் ஒரு போர்வை போன்று அமைந்த வானம் திறந்துகொண்டு கண்ணைக் கூசும் அளவிற்கு அதன் ஒளிக்கீற்று கீழே இறங்கி மனிதர்களுக்கு ஞானம் அளிப்பதை போன்ற சில ஓவியங்களும், சிற்பங்களும், மற்றும் சில குறியீடுகளும் காணப்பட்டன. இது வேற்றுகிரகவாசிகள் மற்றும் வின்கலன்கள் இருப்பதை உணர்த்துகின்றன. இதனைத் தவிர்த்து விண்ணிலிருந்து தெய்வங்கள் பூமிக்கு வந்து, சேற்றாலும் நீராலும் நிறைந்த இந்த பூமியை ரியல் எஸ்டேட் பிளாட் போட்டு, லோக்கல் சேனலில் மார்க்கெட் போன நடிகையை வைத்து விளம்பரம் செய்து கொள்ளை விலைக்கு விற்று நல்ல நிலமாக மாற்றி அமைத்தனர் என்றும் அவர்கள் ஆகாய விமானத்தில் வந்து மனிதர்களுக்கு நீதி, அறிவு, ஞானம், இத்யாதி என போதித்தனர் என்றும் அந்த கடவுள்களின் தூதுவர்களே ஃபாரோஸ் (Pharaohs) மன்னர்கள் எனவும் இதுவே உலகம் தோன்றிய வரலாறு எனவும் பண்டைய எகிப்து மக்களால் நம்பப்பட்டன. அதுவே அவர்களின் மறையாகவும் விளக்குகிறது. இதனை வைத்து பார்க்கும்பொழுது பிரமிடுகளை வடிவமைத்ததில் வேற்றுகிரகவாசிகளின் பங்களிப்பு இருப்பது உண்மை என புலப்படுகிறது. அதைத்தான் "பிரமிடுகளில் இதற்கு தெளிவான விளக்கங்கள் இல்லை என்பது உண்மைதான், ஆனால் பிரமிடுகளுக்குள் இந்த உலகத்தை சாராத அந்நிய விஷயங்கள் இருக்கின்றன" என டாக்டர் ஆலா ஷாகின் போட்டுத் தாக்கினார்.

பல குழப்பங்களும் மர்மங்களும் நிறைந்த பிரமிடுகள் அதிசயமான ஒன்றுதான். வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் பிரமிடுகளை கட்டினார்களா? பிரமிடுக்குள் என்ன இருக்கிறது? என இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வசதியுடன் பல ஆராய்ச்சிகள் அங்கு நடந்தவண்ணம் இருக்கிறது. பிரமிடுகளின் உண்மை சமயலறையில் மணைவி ஒளித்துவைத்த செல்லாத 500 ரூபாய் நோட்டை போல ஒருநாள் வெளிவரும் அப்படி வந்தால் அதுவும் சுவார(க)சியமாக இருக்கும்.