அந்த 5 லட்சம் ஆணுறைகள்.

 
1991-ஆம் ஆண்டு குவைத் நாட்டை சதாம் உசேன் ஆக்கிரமித்து இருந்த நேரம் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் நிலவியது. உலகில் எது நடந்தாலும் நமக்கென்ன என பாப்கார்ன் கொறித்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்துவிட்டு இறுதியில் எல்லாம் முடிந்தபின் வாயைத் திறக்கும் ஐ நா சபை இந்தமுறை முந்திக்கொண்டு குவைத்திலிருந்து படைகளை வாபஸ்பெற வேண்டும் என சதாம் உசேனுக்கு முன்கூட்டியே நிபந்தனை கடிதம் ஒன்றை அனுப்பி அதற்கான கெடுவையும் விதித்தது. நைனா சொல்லியே கேட்காத சதாம் ஐ நா சொல்லியா கேட்கப்போகிறார். நிபந்தனை கடிதத்தை சுருட்டி காதுகுடைந்து தூக்கியெறிந்தார். இதற்கிடையில் கொடுத்த கெடுவும் முடிய குவைத்தை மீட்க அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைவீரர்கள் சவூதி பாலைவனத்தில் குவிக்கப்பட்டனர். இந்த படைகள் மேலிடத்தின் உத்தரவிற்காக பல நாட்கள் வெய்யிலிலும் புழுதியிலும் காத்திருந்தனர்.

இந்த சமயத்தில் பிரிட்டிஷ் படைவீரர்கள் தங்களுக்கு 5 லட்சம் ஆணுறைகள் வேண்டும் உடனே அனுப்பி வைக்கவும் என பிரிட்டிஷ் அரசிற்கு தகவல் அனுப்பினர். போர்க்காலத்தில் ஓய்வெடுக்கும்போது படைவீரர்கள் துப்பாக்கியைத் தவிர்த்து மற்றதை தூக்கும் வழக்கம் உலகமெங்கும் இருக்கும் இருந்த சாதாரண விஷயம்தான் என்றாலும், பெண்களே இல்லாத அந்த பாலைவனத்தில் எதற்கு இத்தனை ஆணுறைகள் என பிரிட்டிஷ் அரசு குழம்பியது. இருந்தாலும் எக்ஸ்ட்டிரா டைம் ஆணுறைகளை எக்ஸ்ட்டிராவாக அனுப்பிவைத்தது.

தீடீரென பிரிட்டிஷ் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் ஆணுறைகள் வந்து இறங்குவதை பார்த்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் திகைத்தனர். ஒருவேளை நமக்கே தெரியாமல் பெண்களை அவர்கள் தேடிப்பிடித்திருப்பார்களோ! என புரியாமல் தவித்தனர். இரவு நேரத்தில் பிரிட்டிஷ் முகாமை வாதகோடாபிகளைக் கொண்டு ஒற்றர்படையை உருவாக்கி உளவும் பார்த்தனர். நாட்கள் சென்றது தப்பித்தவறி பிரிட்டிஷ் முகாமில் எந்தவொரு கசமுசாவும் நிகழவில்லை. மருந்துக்கும் ஒரு பெண்ணைக்கூட அங்கு பார்க்க முடியவில்லை.

அந்த 5 லட்சம் ஆணுறைகள்? 

காத்திருந்த சமயம் நெருங்கியது ஈராக் மீது தாக்குதல் நடத்த மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமெரிக்க படைகளினால் உடனே அங்கிருந்து கிளம்ப முடியவில்லை. அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் எல்லாம் பாலைவன மணல் மூடி இருந்தது அவற்றை சுத்தம் செய்ய அவர்களுக்கு பலமணிநேரம் தேவைப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் படையினரோ உடனே கிளம்பினர். அவர்கள் தங்கள் துப்பாக்கிகள் அனைத்தையும் ஆணுறைகளால் மூடி பாதுகாத்து வைத்திருந்தனர். கட்டளை பிறப்பித்த அடுத்த நிமிடம் ஆணுறையை அகற்றிவிட்டு தாக்குதலைத் தொடர்ந்தனர். பிறகுதான் வளைகுடா போரில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த 5 லட்சம் ஆணுறையின் சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஒற்றுமை, ஒழுங்கு, நாட்டுப்பற்று, யுத்த தந்திரம் இவற்றை தவிர்த்து முன்யோசனை, சாதுர்யம், சாமர்த்தியமும் இராணுவ அமைப்பிற்கு தேவை என்பதை உலகிற்கு உணர்த்தியது இந்த சுவாரசியமான நிகழ்வு.