மயானம் .


யானம் அல்லது சுடுகாடு என்றால் அனைவருக்கும் ஒரு பயம், ஒரு சிறிய தயக்கம் இருக்கும். அட ஏன்? மயானம் இருக்கும் பக்கம் கூட நாம் கால் வைக்க மாட்டோம். அதையும் மீறி அவ்வழி செல்வதாக இருந்தால் அடிவயிற்றில் ஆரஞ்சு நிறத்திலிருக்கும் அட்ரினல் சுரக்க ஒரு வித கிலியுடன் கடந்து செல்வோம். பேய் பிசாசு ஆவி மோகினி ராகினி கவுதமி என அதற்கு காரணமாக இருந்தாலும், இதுதான் நிரந்தரம் ஒருநாள் இங்குதான் வருவோம் என்ற எண்ணமும் பயமும் நம்மில் யாருக்குமே கிடையாது. அதனால்தான் பிக்பாஸ் என அத்தனை ஆட்டத்தையும் ஆடுகிறோம்.


மயானம் என்ற சொல் ''ஷ்மஷான்" என்பதிலிருந்து மறுவியது. 'ஷ்ம' என்றால் சவம் என்று பொருள், 'ஷான்' என்றால் படுக்கை என்று பொருள். எகிப்தின் பிரமிடு முதல் நம் ஆதிச்சநல்லூர் வரை சில அகழ்வாராய்ச்சி இடங்கள்கூட நம் முன்னோர்களின் மயானங்களே. இன்னும் ஒரு சில தலைகள் வீழ்ந்தால் உலகின் அழகிய கடற்கரையான மெரினாவும் மயானமாக மாற அரசியல் வாய்ப்பிருக்கிறது. சொல்லப்போனால் இந்த உலகமே ஒரு மயானம்தான்.

"எல்லோர் வீடுகளிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதை மயானத்தை நோக்கிச் செல்கிறது"

- என்று ஒரு அற்புதமான அரபு கவிதை உள்ளது. ஆளும் அரசன் முதல் ஆண்டிவரை காலத்தின் கணக்குப்படி ஒருநாள் அந்த பாதையில் பயணித்தே ஆகவேண்டும். மயானத்தை வடமொழியில் "காயந்த்த" என்பார்கள். 'காயா' என்றால் உடல் 'அந்த்த' என்றால் முடிவு என்று பொருள்படும் (உயிர் முடியும் இடம் அல்ல உடல் முடியும் இடம்). ஒருவன் இந்த மண்ணில் நல்லது கெட்டது பேர் புகழ் செல்வம் என எடுத்து கெடுத்து சேர்த்த அனைத்தையும் முடிக்கும் இடம் இந்த இடம்தான். அதிலும் நாம், ஜாதி மதம் அரசியல் ஊழல் என ஒரு கை வைத்துவிட்டுதான் கடைசியில் கால் நீட்டுகிறோம். அவ்வாறு உலக மக்களுக்கெல்லாம் முடிவிடமாக விளங்கும் இந்த மயானத்திற்கு முடிவு என்பதே கிடையாதா? அதன் முடிவை கண்டவர் யாராவது இருக்கிறார்களா? ஒருவேளை இதுதான் நிரந்தரமா? வாழ்வின் நிலையற்ற தன்மையையும் எதார்த்தத்தையும் மற்றும் நாமெல்லாம் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்திருக்கும் மயானத்தைப் பற்றியும் அழகாக குறிப்பிடுகிறது இந்த புறநானூற்று பாடல்.

களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.

பொருள்.

பரந்த களர் நிலத்தில் கள்ளிச்செடி முளைத்துள்ளது, பகல்பொழுதில் கூவும் ஆந்தைகளாலும், பிணத்தை எரிக்கும் தீயின் ஒளியாலும், அகன்ற வாயுடைய பேய் மகளிராலும், இந்த புகை தவழும் சுடுகாடு காண்போர்களுக்கு அச்சத்தை தருகிறது. மனதால் விரும்புகிறவர்கள் அழுது சொரிந்த கண்ணீர் எலும்புகள் கிடக்கும் சுடுகாட்டுச் சாம்பல் தீயை அடக்க, எல்லோருடைய முதுகையும் கண்டு, உலகமக்களின் முடிவிடமாக விளங்கும் இந்த சுடுகாட்டின் முதுமையை காணும் வல்லவரை அது இதுவரை கண்டதில்லை.