டோங்கிரியிலிருந்து துபாய்க்கு.


ந்தியாவின் ஒரே டான் இவன்தான். ஹாலிவுட் ஸ்டைலில் காட்பாதர் என்றாலும் படு லோக்கலாக தாதா என்றாலும் இவன் ஒருவனே நினைவுக்கு வருவான். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் தலை சிறந்த முடிசூடா கடத்தல் மன்னனும் இவன்தான். கொலை, கொள்ளை, திருட்டு, ஆள்கடத்தல், பணம்பறிப்பு, போதை மாஃபியா, ஆயுதபேரம், ஹவாலா முதல் உஜாலா வரையிலான பண பரிமாற்றம், கள்ளநோட்டு, லாட்டரி, சூதாட்டம், கிரிக்கெட் பெட்டிங், சினிமா, திருட்டு விசிடி, சுபாரி தொழில், ரியல் எஸ்டேட், அரசியல், தீவிரவாதம் மற்றும் சாதாரண கட்டப் பஞ்சாயத்து முதல் வீரபாண்டிய கட்டப் பஞ்சாயத்து வரை இவன் கால் வைக்காத நிழல் உலக தொழில்களே இல்லை எனலாம். (திருட்டு விசிடி மூலம் இவன் ஒருவருடம் சம்பாதிக்கும் பணம் மட்டும் 1500-4000 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்).

உலகின் பல நாடுகளில் இருக்கும் இவனது தலைமை பணியாளர்களின் எண்ணிக்கை  மட்டும் ஐயாயிரத்தை தாண்டும் அதனையும் தவிர்த்து ஒரு லட்சத்திற்குமான மறைமுக வேலையாட்களும் இவனது கண்ணசைவிற்கு வேலை செய்கின்றனர். உலகமகா டான்களைவிட ஒரு மடங்கு விஞ்சக்கூடிய நிர்வாகத் தன்மை கொண்ட இவனது D - கம்பேனிதான் நிழல் உலக தொழில்களுக்காக தொடங்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வமான நிறுவனமாக இருக்கக்கூடும். தன்னை ஒரு தொழில் அதிபராக காட்டிக் கொண்டு தனியே நிறுவனம் ஒன்றைத் தொடங்கி  குற்ற செயல்களை திறன்பட நடத்தி வருபவனும் இவனாகத்தான் இருக்கக்கூடும். அதற்குத் தகுந்தாற்போல் இங்கிலாந்தின் போர்ப்ஸ் பத்திரிக்கை 2009 -ல் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இவனுக்கு 57 வது இடத்தை கொடுத்திருந்தது. உள்ளூர் முக்கிய புள்ளி முதல் வட்டம் சதுரம் செவ்வகம் முக்கோணம் அரைவட்டம் என அனைத்து தரப்பிலும் இவனுக்கு தொடர்பு இருக்கிறது. குறிப்பாக இந்திய பாராளுமன்றம் செல்லும் சில பைஜாமாக்களுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ க்கும் இன்றும் இவன் செல்லப் பிள்ளையாக இருக்கிறான். அதனையும் தவிர்த்து லக்ஷர் - இ- தொய்பா, போகோ அராம், அல்கயிதா போன்ற தீவிரவாத இயக்கங்களின் தலை மற்றும் தாடிகளுடன் உட்கார்ந்து சூடாக சமோசாவும் வர டீயும் சாப்பிடும் அளவிற்கு இவனுக்கு பழக்கம் இருக்கிறது.

பூ போன்ற தரை விரிப்பு, மின்னும் ஒளி விளக்குகள், மிதக்கும் மெத்தை கொண்ட நீச்சல் குளங்கள், அதில் நீந்தும் அழகு பெண் வாத்துகள், இதுவரை சுவைக்காத மது, புசித்திராத உணவுவகைகள், தொட்டுக்கொள்ள சைடிஷ்களாக பாலிவுட் நடிகைகளின் இடுப்பு என இந்திரலோகத்தை கண்முன் நிறுத்தும் அவன் கொடுக்கும் விருந்திற்காக தொங்கப் போட்டுக்கொண்டு வரும் (நாக்கை) தொழில் அதிபர்களும், விஐபிகளும், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஏராளம் ஏராளம் (அதில் பாகிஸ்தானின் முன்னால் அதிபரும் ஒருவர்). தன்னை நம்பியிருப்பவர்களுக்கு வாரியிறைக்கும் வள்ளல் இவன். லோக்கல் கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரி வரை இவன் வீசும் பொறைக்காக வாலாட்டி காத்திருப்பார்கள், கை நீட்டும் இடத்தில் குரைப்பார்கள், கடிக்கவும் செய்வார்கள். சில நேர்மையாக தங்கப்பதக்கம் எஸ்.பி. சௌத்ரிகளுக்கு அன்றும் இன்றும் என்றும் இவன் சிம்ம சொப்பனம்.

என்பது மற்றும் தொன்னூறுகளில் மும்பையின் மொத்த அசைவும் இவன் பிடியில் இருந்தது. குறிப்பாக பல கோடிகளும் கேடிகளும் புரளும் பாலிவுட் சினிமாவை இவன் இடக்கையில் வைத்திருந்தான். கான்களும் கபூர்களும் தத்துகளும் இந்த டானின் காலடியில் கிடந்தனர். உலக அழகி என்ன? ஜுஜூபி, பல ஜிலேபி நடிகைகளை இவன் வலக்கையில் வளைத்திருந்தான். அவர்களுக்கு படுக்கையை ஒதுக்கியிருந்தான். உச்சகட்டமாக 1993 ஆம் ஆண்டு மும்பையின் உயிர்நாடியையே இவன் ஆட்டிப் பார்த்தான்.

காண்பவர்களை கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம் கொண்டவன் இவன். அவனது நடையும் பேச்சும் எதிரிகளைக் கூட கலங்க வைக்கும் அசந்தால் மயங்கவும் வைக்கும். ஆடம்பர பிரியனான இவன் வசிக்கும் மாளிகைகளின் பெயர் வெள்ளை மாளிகை. எடுப்பான தோற்றத்திற்காக அவன் உடுத்தும் ஆடைகள் லண்டனின் செவில் ரோவிலிருந்து வருகின்றன. கார்டர் வைரங்கள் பதித்த கைக்கடிகாரங்களையே இவன் பெரிதும் அணிவான். ட்ரெஷர் சிகரெட், மஸரெட்டி கூலிங்கிளாஸ் இவனது அடையாளங்களில் ஒன்று. கப்பல் போல பல கார்கள் வைத்திருந்தாலும் குண்டு துளைக்காத கருப்பு நிற மெர்சிடஸையே எப்போதும் இவன் பயன்படுத்துவான். அதிலிருக்கும் இவனது பாதுகாப்பு அம்சங்களை எடுத்துக் கொண்டால் இந்திய பிரதமரின் பாதுகாப்பை விட சற்று அதிகமாக இருக்கும். இவன் கையெழுத்து போடும் வைரம் பதித்த பேனா கூட ருபாய் ஐந்து லட்சம் விலையைத் தாண்டும்.

இன்றைய நிலவரப்படி உலகம் தேடும் குற்றவாளிகளின் பட்டியலில் இவன் நான்காம் இடத்தில் இருக்கிறான். இந்தியாவைப் பொருத்தவரை தேடப்படும் குற்றவாளிகளில் இவன்தான் பல வருடங்களாக முதலிடத்தில் உள்ளான். இங்கு தாமரைக்கை எது மலர்ந்தாலும் ஆட்சியாளர்களுக்கு ஆட்டம் காட்டிக்கொண்டு பெரும் தலைவலியாக இருக்கிறான். பாகிஸ்தானைப் பொருத்தவரை இவன் அவர்களுக்கு தத்துப் பிள்ளையாக விளங்குகிறான். சாம்பிராணி கொளுத்தி பச்சை துண்டைத் தாண்டி இங்கு இல்லை, இல்லவே இல்லை என சத்தியம் செய்தாலும் இவன் தற்போது தனது அறுபது வயதை தாண்டி பாதுகாப்பாக பாகிஸ்தானில்தான் இருக்கிறான். அங்கிருந்து தன் விரலசைவில் நிழல் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறான். பாகிஸ்தான்,  இந்தியா என ஆசிய நாடுகள் பலவற்றிலும் இவனுக்கு இருக்கும் அசையும் அசையா பினாமி சுனாமி சொத்துக்கள் பல கோடிகளைத் தாண்டும். நாமெல்லாம் மறந்துபோன 2 ஜி ஊழலில் முக்கிய பங்கு வகித்த நிறுவனமும், பிரபல நடிகர் வந்து அட்சயதிருதியைக்கு நகை வாங்கலையோ என கூவும் அந்த நகைக்கடையும் இவனுக்கு சொந்தமான கடுகளவு சிறிய உதாரணங்கள் ஆகும்.

இவனுக்கு மொத்தம் பதிமூன்று பெயர்கள் இருக்கின்றன. பாகிஸ்தானில் இவனது பெயர் சேக் தாவூத் ஹஸன். பாஸ்போட்டில் இருக்கும் பெயர் இக்பால் சேத். சிலர் இவனை டேவிட் என அழைப்பார்கள். நண்பர்கள் மற்றும் தன் நிறுவனத்தார்களுக்கு இவன் ஹாஜி சாஹப் அல்லது அமீர் சாஹப். ரகசியமாக இவன் பெயர் D.

சரி!... யார் இவன்?... இவனுக்கும் இந்த புத்தகத்திற்கும் என்ன சம்மந்தம்?

இந்தியாவில் கருப்பு வெள்ளை என சதுரங்க முகம் கொண்ட முக்கிய நகரம் மும்பை. போர்த்துகீசியர் வந்திறங்கி வடிவமைத்தது முதல் இன்றுவரை இந்த நகரம் வர்த்தகங்களாலும் தொழில்களாலும் மக்கள் தொகையாலும் செழிப்புடன் விளங்குகிறது. இது ஒருபுறமிருக்க கொலை கொள்ளை கடத்தல் போதை விபச்சாரம் என முறைபடுத்தப்பட்ட குற்றங்கள் செழிக்கும் இந்தியாவின் நகரமும் இதுதான். மும்பையில் உள்ள நர் பஸார், உமர்கடி, சோர் பஸார், காமாத்திபுரா, டோங்கிரி போன்ற இடங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆசியாவின் மிகப்பெரிய மாஃபியா நெட்வொர்க் இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த பட்டியலில் உள்ள டோக்கிரி என்னும் ஊரில் பிறந்தவன்தான் மேலே குறிப்பிட்ட அத்தனை புகழுக்கும் சொந்தக்காரனான தாவூத் என அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம் கஸ்கர்.

குற்றப் பின்னணியான சூழ்நிலையில் வளர்ந்து சிறுவயதில் சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டு பின்நாட்களில் தாவூத் யாரும் நினைத்துப் பார்க்காத டானாக மாறிப்போனான். சுதந்திரத்திற்கு முன்பே இந்த பகுதியில் மாஃபியாக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. அலகாபாத் கும்பல், ஜானி குருப், சின்கா தாதா, இப்ராஹிம் தாதா, கரீம் லாலா, பாஷூ தாதா, அருண் காவ்லி, ஹாஜி மஸ்தான்,  வரதாபாய் என்கிற வரதராஜ முதலியார் (நாயகன் சினிமாவின் வேலு நாயக்கர்) மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து குடியேரிய பதான்கள் என அழைக்கப்படுபவர்களும் இங்கு மும்பையில் நிழல் உலக தொழில்களை செய்து வந்தனர். ஆனாலும் தாவூத் அளவிற்கு யாரும் புகழ்பெறவில்லை. தாவுத் தனது வளர்ச்சி காலத்தில் மும்பையின் ஒரு சக்தியாகவே விளங்கினான். 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பிற்கு பின்புதான் அவனது பிம்பம் சற்று மாறியது. உலகமும் அவனை குற்றவாளியாக கருதியது. தேடப்பட்டுவந்த தாவுத் சில ஷேக்குகளின் தயவில் துபாய்க்கு சென்று தஞ்சம் புகுந்தான். தன் தொழிலின் தலைநகராக துபாயை மாற்றிக்கொண்டான். இந்தியாவில் அவனது சொத்துக்கள் முடக்கப்பட்டாலும் தன் தொழிலை இம்மியளவும் குறைக்காமல் பார்த்துக் கொண்டன். துபாயிலிருந்தபடியே தன் ரிமோட் கைகள் மூலம் அத்தனையையும் இயக்கி சாதனையும் படைத்தான். தெளிவாகச் சொன்னால் இந்தியாவின் மாஃபியாவை டோங்கிரி முதல் துபாய்க்கு (Dongri to Dubai) கொண்டு சென்றவன் இவன் ஒருவன்தான்.

இத்தனைக்கும் தாவூத் ஒரு சாதாரண போலிஸ் கான்ஸ்டபிளின் மகனாகப் பிறந்தவன். பின்னாளில் அவன் எப்படி இத்தனை சக்தி வாய்ந்த மனிதனாக மாறினான்? அதற்கு காரணம் அவனது உழைப்பா?  நிர்வாகத் திறமையா? அதிஷ்டமா? மதமா? கடவுள் கிடவுளின் கருணையா? மேலும் மும்பை மாஃபியாவில் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த பலர் இருக்க அவனால் எவ்வாறு வளர முடிந்தது? அவர்களை இவனால் எப்படி ஓரங்கட்ட முடிந்தது? தன் எதிரிகளிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் அவனால் எப்படி தப்பி பிழைக்க முடிந்தது?  மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் அவனுக்கும் என்ன சம்பத்தம்? மதம் ஒரு பொருட்டே இல்லை என அனைவரையும் அரவணைத்த அவன் மும்பையை வஞ்சித்தது ஏன்? தீவிரவாத தொடர்பு அவனுக்கு எப்படி கிட்டியது? இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் அவன் பகடைக்காயாக மாறியது எதனால்? தற்போது அவன் எங்கிருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனது பெயரை கேட்டதும் பயம் கலந்த ஒருவித உணர்வு வருவது எதனால்? அத்தனை கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்த புத்தகம்.

இந்தியாவின் கிரைம் ரிப்போர்ட்டர்களில் முக்கியமானவர் எஸ். ஹூஸேன் ஸைதி. தனது பல வருடகால உழைப்பில் இந்த புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். பல குற்றங்களின் ஆவணங்களைப் போல் இல்லாமல் திரைப்படம் பார்ப்பதைப் போல விருவிருப்போடும் கதையம்சத்தோடும் அவரது எழுத்துக்கள் பயணிக்கிறது. வெறும் தாவூத்தின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடாமல் மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு வரலாற்றையும் இவர் அலசி பார்த்திருக்கிறார். மும்பையில் தாதாயிசம் உருவான விதம், வளர்ந்த முறை, தாதாக்களின் தனி வாழ்க்கை, அவர்களின் தொழில், நிதியாதாரம், ஈகோ யுத்தம், அரசியல் மற்றும் பாலிவுட் உறவுகள், சர்வதேச வளர்ச்சி என அனைத்து சாராம்சமும் இந்த புத்தகத்தில் இருக்கிறது. மேலும் தாவூதின் கரமாக செயல்படும் சோட்டா ராஜன், ரவி புஜாரா, அருண் காவ்லி போன்றவர்களைப் பற்றியும், அவனது எதிரிகளைப் பற்றியும் இதில் அழகாக குறிப்பிட்டிருக்கிறார். அதைவிட தாவூத் தனது இளமை பருவத்தில் பஞ்சாபி பெண்ணான சுஜாதா என்பவரை காதலித்து ஜாலியாக டூயட் பாடி பிறகு பெற்றோர்களுக்காக அந்த காதலை உதறித் தள்ளிவிட்டு 'தில் தியா தர்த் லியா'  படத்தில் வரும் 'குஜ்ரே ஹைன் ஆஜ் மெய்ன்' என்ற பாடலை (அதற்கு அர்த்தம் "இன்று காதல் என்ற வார்த்தையை கேட்க முடியாத அளவிற்கு நான் காதலின் மோசமான நிலையை அடைந்துவிட்டேன்" என்பதாகும்) சோகமாக அவன் பாடித் திரிந்த சுவாரசியமும் இந்த புத்தகத்தில் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்த புத்தகம் 100 பாட்ஷா, 75 டான் , 50 ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை, 25 நாயகன், 10 காட்பாதர் திரைப்படம் பார்ப்பதற்குச் சமம்.