இணை பிரபஞ்சம்.

பருவநிலை மாற்றம் இயற்கை சீற்றம் அவ்வபோது பயமுறுத்தும் விண்கற்கள் இவற்றை கவணிக்கும்போது இந்த உலகம் அழியப்போகிறதா? அவசர அவசரமாக உலக விஞ்ஞானிகள் அமேரிக்காவில் கூடினர். உலகம் அழிந்தால் என்ன செய்வதென விவாதித்தனர். ஆளுக்கொரு கதையும் அதற்கு தீர்வும் கூற கடைசியில் நியூயார்க் சிட்டி யூனிவர்சிட்டியில் பணிபுரியும் "மிஷியோ காக்கூ (Michio Kaku)" என்பவருக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. "இந்த உலகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் விரிவடைந்துக் கொண்டே வருகிறது அதனால் நம் பிரபஞ்சமே அழிந்துவிடும் அதற்குள் நாம் அடுத்த பிரபஞ்சத்திற்கு சென்றுவிடலாம்" என படு இயல்பாக பென்சிலால் காது குடைந்தபடி மிஷியோ காக்கூ பேசி முடித்தார். மேலும் தனது பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பையும் அப்போது போட்டு உடைத்தார். பார்ப்பதற்கு ஐன்ஸ்டீனின் சைனா தயாரிப்புபோல் இருக்கும் மிஷியோ காக்கூ சாதாரணமானவர் இல்லை ஐன்ஸ்டீன் முடிக்காமல் விட்டுச்சென்ற ஆராய்ச்சிகளை இன்று தொடர்பவர் அவரின் கண்டுபிடிப்புதான் "இணை பிரபஞ்சம்" (Parallel Universe).

முதலில் பிரபஞ்சம் என்றால் என்ன? பார்த்துவிடலாம்.

கடவுள் இந்த உலகைப் படைத்தார் அது தட்டையானது சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும் நம்மை சுற்றி வருகிறது என நம்பிக்கொண்டிருந்த நாம், டார்வினை கண்டபடி திட்டி கலிலியோவை கல்லால் அடித்து கோபர் நிக்கோலஸின் மீது கோபப்பட்டு உலகம் தோன்றிய ரகசியத்தையும், அது உருண்டையாக உள்ளது என்றும், பூமிதான் சூரியனை சுற்றிவருகிறது என்றும், பூமியைப்போல் பல கிரகங்கள் சூரியனைச் சுற்றி ஒரு குடும்பமாக இருக்கிறது என்றும், சூரியக் குடும்பத்தைப் போல எக்கச்சக்க குடும்பங்கள் இருக்கிறது எனவும் தெரிந்து கொண்டோம். இப்படி பல இலட்சம் சூரிய குடும்பங்கள் இணைந்த நட்சத்திர மண்டலங்களின் (Galaxy) தொகுப்பே "பிரபஞ்சம்" (Universe) எனப்படும்.

இந்த பிரபஞ்சமும் ஒன்றோடு முடிவில்லாமல் எண்ணற்ற பிரபஞ்சங்கலாக காற்றுக் குழிழ்களைப்போல் அண்டவெளியில் மிதந்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானம் நமக்கு கூறுகிறது. அதாவது மிகப்பெரிய அண்டவெளி அதில் எண்ணற்ற பிரபஞ்சம், அந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் பல இலட்சம் குடும்பத்தில் ஒரு அழகான சூரிய குடும்பம் (Solar System), அந்த குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தில், ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் ஒரு தாலுக்காவில் ஒரு ஊரில் ஒரு இடத்தில் நீங்கள் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என கொஞ்சம் கண்ணைமூடி கற்பனை செய்து பாருங்கள்.

சரி நம் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? அது எவ்வாறு தோன்றியது?

அண்டவெளியில் பயணிக்கும் ஒவ்வொன்றிர்க்கும் எழுதப்படாத டிராபிக் ரூல்ஸ் உண்டு. கிரகங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஈர்ப்புவிசையின் மூலம் தமக்குத்தாமே எல்லைக்கோட்டை  அமைத்துக்கொண்டு 'இது எங்க ஏரியா உள்ள வராதே' என சுற்றிக் கொண்டிருக்கும். அவ்வாறு சுற்றும் கிரகத்தின் எல்லை வட்டத்திற்குள் சிறிய கிரகங்களோ அல்லது விண்கற்களோ வேறு எதாவது ஒன்றோ வந்தால் அது லபக்கென அதனையும் ஈர்த்துக்கொள்ளும். பூமி, சூரியன், நிலவு, விண்கற்கள் அவ்வளவு ஏன் நாம் அனுப்பும் செயற்கைக்கோள்கள் கூட அண்ட வெளியில் இவ்வாறுதான் இயங்குகிறது. இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது.

காற்றுக் குமிழ்களைப் போல் ஈர்ப்புவிசையில் அண்டவெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் சுமூகமாக இருந்தால் நல்லது ஆனால் சில நேரங்களில் அப்படி நிகழ்வதில்லை. பிரபஞ்சத்தில் இருக்கும் பொருள்களின் ஈர்ப்புவிசையின் வேகம் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அவைகள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்பட்ட ஒரு பிரளயத்தில்தான் நம் பிரபஞ்சம் மற்றொன்டோடு மோதி வெடித்துச் சிதறி பிரிந்து தோன்றியது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இணை பிரபஞ்சத்திற்கு வருவோம்.

ஒரு பிரபஞ்சத்திலிருந்து நாம் பிரிந்தோம் என்றால் நம்மைப் போன்ற மற்றொரு பிரபஞ்சம் அண்டவெளியில் நிச்சயம் இருக்கும் அல்லவா? ஆம், அது உண்மைதான். ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் அதன் கண்ணாடி பிம்பம் போல் அச்சு அசலாக வேறொரு பிரபஞ்சம் இருக்கிறது. அது ஒன்றோடு மட்டுமில்லாது எண்ணற்றவையாக மிதந்துக் கொண்டிருக்கிறது. அதில் காற்றுவெளி, நேரம், அணுத்துகள்கள், இத்யாதி இத்யாதி என அனைத்தும் வேறோரு பரிணாமத்தில் உள்ளது. அதில் சிலவற்றில் நீங்கள் நீங்களாகவோ நான் நானாகவோ அல்லது வேறொரு பரிணாமத்திலோ (ஏலியன்ஸ்) அங்கும் இருக்கலாம் என்பதே இணை பிரபஞ்ச கண்டுபிடிப்பாகும்.

இந்த இணை பிரபஞ்சம் எங்கு இருக்கிறது?.

மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த இணை பிரபஞ்சங்கள் நம்மைவிட ஒரு மில்லிமீட்டர் குறைவான தூரத்தில் இருக்கிறது. அதாவது நம் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தியே மற்றொரு பிரபஞ்சத்திலிருந்து நம்மீது கசிந்து கொண்டிருக்கும் ஒரு வீரியம் குறைந்த சக்தி அல்லது சிக்னலின் தாக்கமாக அமைந்திருக்கிறது. அப்படி இருக்கிறதென்றால் ஏன் அவற்றை நம்மால் காண முடிவதில்லை?. அதற்கும் பதில் இருக்கிறது. நீங்கள் உங்கள் அறையில் ரேடியோவில் FM நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் அதில் உங்களுக்கு பிடிக்காத பாடல் வருகிறது உடனே நீங்கள் வேறொரு அலைவரிசையை மாற்றி வைத்து விடுகிறீர்கள். அதுவும் பிடிக்கவில்லை வேறொன்றை மாற்றுகிறீர்கள். உங்களால் இவ்வாறு பல அலைவரிசைகளை மாற்ற முடியும் ஆனால் உங்களால் பல அலைவரிசைகளை ஒரே நேரத்தில் கேட்க முடியாதுதானே? அதுபோலத்தான் நம் பிரபஞ்சம் நம்முடைய அலைவரிசையை மட்டுமே பெற்றிருக்கும். நம்மால் இரண்டு பிரபஞ்சங்களில் இயங்கவோ அவற்றை பார்க்கவோ முடியாது.

இதைத்தான் இணை பிரபஞ்சம் என்றால் என்ன? அது எங்கு இருக்கிறது? என்பதைப் பற்றியும், நாம் வாழும் பிரபஞ்சம் அழிந்தால் இருக்கவே இருக்கிறது நமது இணை பிரபஞ்சம் நாமெல்லாம் அங்கு சென்றுவிடலாம் என விஞ்ஞானிகள் மாநாட்டில் மிஷியோ காக்கூ பேசியிருந்தார்.

கடைசி கட்டத்திற்கு வருவோம். நம் பிரபஞ்சம் எப்படி அழியும்?

அனைத்திற்கும் ஓர் ஆரம்பம் உண்டு என்றால் முடிவும் கட்டாயம் இருக்கும் அதுபோல் நம் பிரபஞ்சத்திற்கும் ஆயுட்காலம் உண்டு. தற்போது அறிவியல் கூற்றுப்படி நமது பிரபஞ்சத்தின் வயது 13.799 மில்லியன் ஆண்டுகள் என கணக்கிட்டு வைத்திருக்கின்றனர். குறிப்பிட்ட காலங்களில் அழிவதற்கு முன்பு ஒரு பிரபஞ்சமானது விரிவடையத் தொடங்கும். பலநூறு வருடங்களில் ஒரு விரலளவு விரிவடையும் அது தன் சக்திக்குமேல் விரிவடைந்து மொத்த அழிவையும் சந்திக்கும். பெரும்பாலும் அத்தகைய அழிவுகள் மிகப் பரந்த குளிர்ச்சியினால் ஏற்படும் உறைநிலையில் (Freezing) தொடங்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கடைசியில் மொத்தமாக உறைந்து போகும். நம் பிரபஞ்சமும் இப்படித்தான் அழியும்.

அப்படி அழிந்தால் மற்றொரு (இணை) பிரபஞ்சத்திற்கு எப்படி செல்வது?.

பிரபஞ்சமும் அதிலிருப்பவைகளும் (பூமி, சூரியன், நிலவு ...etc) ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு விசையில் இயங்குகிறது, தன் அருகில் யாராவது ஈர்ப்பு குறைந்த சோப்ளாங்கி வந்தால் உடனே இழுத்துக் கொள்ளும் என முன்பே பார்த்தோம் அல்லவா? அதன்படி நாம் வாழும் பிரபஞ்சம் உறைந்துபோய் அழியும் முன் ஈர்ப்புவிசை குறையத் தொடங்கும் அப்போது நம் அருகிலிருக்கும் இணை பிரபஞ்சம் வாங்க வாங்க என நம் குடும்பத்தையும் அன்போடு ஈர்த்துக் கொள்ளும்.

மேலும் நமக்கு மிக அருகில் வேறொரு அலைவரிசையில் இணை பிரபஞ்சம் உள்ளது என்ற மற்றொரு விசயத்தையும் பார்த்தோம் அல்லவா? அதன்படி பிறகுவரும் காலங்களில் நாம் ஒரே அலைவரிசையில் இரண்டு பிரபஞ்சங்களில் இயங்கும் வாய்ப்பை பெறலாம் (ரேடியோவில் இரண்டு அலைவரிசையையும் ஒரே நேரத்தில் கேட்பது போல்) அப்படி பெற்றால் நம் பிரபஞ்சம் அழிவது தெரிந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் மற்றொரு பிரபஞ்சத்திற்கு தாவிவிடலாம். நமக்தே தெரியாமல் இயற்கை நமது இணை பிரபஞ்சத்திற்கு செல்ல இந்த இரண்டில் எதாவது ஒரு வழியைக் நிச்சயம் காட்டும்.

"..நாம் வாழும் பிரபஞ்சம் கொஞ்சம் வேகமாக முழு அழிவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அது எப்போது நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை அது நாம் தூங்கிவிழிக்கும் நேரத்தில் கூட நிகழும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் நாளை வேறொரு சுவையான தகவலுடன் உங்களை இணை பிரபஞ்சத்தில் சந்திக்கிறேன்.."