எழுச்சிமி......கு கண்டுபிடிப்பு...



1992- ஆம் ஆண்டு அமேரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் (Pfizer) என்ற மருந்துகள் தயாரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தோள்பட்டை மற்றும் மார்புவலி தொல்லையால் அவதிப்பட்ட கிராமத்து ஆசாமி ஒருவர் சென்றார். அவருக்கு அங்கு ஆன்ஜீனா (Angina) என்று சொல்லக்கூடிய இருதயத்திலிருந்து உடலுக்கு இரத்தம் சீராக பாயாத பிரச்சனை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழக்கமாக கொடுக்கும் மாத்திரையை ஆ.மு, ஆ.பி, காலை-1, இரவு-1 என எழுதிக் கொடுத்து அனுப்பிவைத்தனர். ஆனால் அந்த கிராமத்து ஆசாமிக்கு எதுவும் குணமாகவில்லை. மீண்டும் அவர் திரும்பி அதே நிலையிலே அந்த நிறுவனத்தை அடைந்தார். ஆஹா..! சோதனை எலி தானாகவே வந்து சிக்கிக்கொண்டது என அவரை மற்ற மருத்துவர்கள் தலைமை ஆராய்ச்சி மருத்துவர்களிடம் அனுப்பி வைத்தனர். தலைமை மருத்துவர்களும் அந்த கிராமத்து அசாமியை ஒருமுறை பரிசோதித்துவிட்டு Andrew Bell, David Brown, Nicholas Terrett என்பவர்கள் கண்டுபிடித்த Pyrazolopyrimidione என்ற வேதியியல் தொகுப்பைச் சேர்ந்த Sildenafil என்ற மாத்திரைகளை கொடுத்து இரண்டுநாள் கழித்து வந்து பார் என அனுப்பினர். நாட்கள் கடந்துகொண்டிருந்தது அந்த கிராமத்து ஆசாமி திரும்ப வரவேயில்லை. சோதனை எலிக்கு என்னவாயிற்று என்ற கவலை ஆராய்ச்சியாளர்களுக்கு தொற்றிக்கொண்டது. அதற்கு காரணமும் இருந்தது. Sildenafil என்ற அந்த மருந்து தற்போதுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது, இதய நோய்க்கு பயன்படும் அந்த மருந்தினால் ஏதாவது தவறுதல் நடந்திருக்கலாம் என அவர்கள் நினைத்தனர். எனவே அந்த கிராமத்து ஆசாமியை அலைந்து திரிந்து ஒருவழியாக தேடிப் பிடித்து அவர் வீட்டுக்கதவை தட்டினர்.

டக்...டக்...டக்....

........என்ன நடந்தது?.

Sildenafil மாத்திரைகளை விழுங்கியபின் அந்த கிராமத்து ஆசாமிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தது பக்கவிளைவு என்றால் "பக்கா " விளைவு ஏற்பட்டிருந்தது. அதாவது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நைட்ரஜன் ஆக்சைடை வெளியிட்டு தசை இறுக்கத்தை ஒழுங்குபடுத்தி PDE5 என்ற ஹார்மோனை தூண்டி கிளர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது ( சுருக்கமாக சொன்னால் முருங்கைக்காய் எஃபைக்ட்). கிராமத்து ஆசாமி நடந்ததை வளைந்து நெளிந்து விளக்க, அவரது மனைவி கதவிற்குப் பின்னால் நின்று வெட்கத்துடன் சிரிக்க, ஆராய்ச்சியாளர்களுக்கு உடனே பொறிதட்டியது. Sildenafil மருந்தின் இருதய நோய்கான ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டு "எழுச்சிமிகு" இந்த ஆராய்ச்சியை அவர்கள் தொடந்தனர். பலன் "பெரிதாக" இறுதியில் 1994 ஆம் ஆண்டு Erectile Dysfunction (ED) என்று சொல்லக்கூடிய நோய்க்கு Sildenafil அற்புத மருந்து என கண்டுபிடித்தனர். உடனே லேகியம் விற்கும் டுபாக்கூர் சித்தமருத்தவர் போல C22H30N604S என்ற பார்முலாவை தூக்கிக்கொண்டு ஊர்ஊராக அங்கீகாரத்திற்காக அலைந்தனர். கடைசியில் March 27 1998 -ஆம் ஆண்டு FDA பச்சைகொடி காட்ட, டைமன்ட் வடிவில் நீல வண்ணத்தில் மாத்திரைகளை தயாரித்து Blue Pill என்ற பெயரில் விற்பனை செய்யத் தொடங்கினர்.

இன்று உலகமுழுவதும் 35 மில்லியன் ஆண்கள் ED என்ற நோய்க்கு மருந்தாகவும் முருங்கைக்காய் சமாச்சாரத்திற்கும் இதனை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு 1- [4-ethoxy 3-(6,7-dihydro-1-methyl-7-oxo-3-propyl-1H-pyrazolo [4,3-d] pyrimidin-5-y1)phenylsulfones]- 4- methylpiperazine என்ற IUPAC வேதியியல் பெயரும், Silsenafil என்ற மூலப்பொருளின் பெயரும், எழுச்சிமிகு இந்த கண்டுபிடிப்பின் சுவாரசியமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் வயாகரா (Viagra) என்ற இந்த மருந்தின் செல்லப் பெயரை சொன்னால் வளைந்து நெளிந்து லேசாக புன்னகைப்பார்கள் அந்த கிராமத்து ஆசாமியை போல.